சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
திருமுறைத் தொகுப்பு
10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகிறது.