முருகன், குமரன் - (நாம மகிமை)
முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.
......... பதவுரை .........
பொரு புங்கவரும் ... போர் புரிவதில் விருப்பமுள்ள தேவர்களும், புவியும் பரவும் ... பூவுலகத்தவரும் புகழ்ந்து துதிக்கின்ற, குரு புங்கவ ... குரு சிரேஷ்டனே, எண் குண பஞ்சரனே ... அருங் குணங்கள் எட்டிற்கும் உறைவிடமானவனே, முருகன், குமரன், குகன் என மொழிந்து ... முருகன், குமரன், குகன் என உனது திரு நாமங்களை மெய்யன்புடன் புகழ்ந்து கூறி, உருகும் செயல் தந்து ... உள்ளம் கசிந்து உருகும் தன்மையைத் தந்து, உணர்வு என்று அருள்வாய் ... மெய்யுணர்வை எப்போது அடியேனுக்கு தந்து அருள் புரிவாய்.
......... பொழிப்புரை .........
சண்டையில் ஈடுபடும் வானோரும் மண் உலகத்தவரும் வணங்கித் துதிக்கின்ற ஆச்சார்ய சிரேஷ்டனே, எட்டு குணங்களையே தனது திரு உருவமாகக் கொண்டவனே, முருகன், குமரன், குகன் என்று நெஞ்சு கசிந்து மொழிந்து உருகி உணரும் அறிவை எப்போது கொடுத்தருளப்போகிறாய்?
......... விளக்கவுரை .........
இப்பாட்டில் ஒவ்வொரு சொல்லிற்கும் சில விஷேசப் பொருள் உண்டு. அவற்றைப் பார்ப்போம்.
பொருபுங்கவரும் பரவும் ... தேவர்களுக்கு பகைவர்களால் ஆபத்து வந்து துன்பப்படும் போதெல்லாம், முருகனையே துதித்து துணையாகக் கூப்பிடுவார்கள். சூரபத்மனால் தேவலோகம் ஆக்கிரமிக்கப்பட்டு, தேவர்கள் எல்லோரும் சூரனுக்கு அடிமைகளாகி, அவன் கொடுத்த பல இழிவான தொழில்களை செய்துக்கொண்டிருந்தபொழுது, ஆறுமுகப் பெருமான் உதித்து, சூரபத்மாக்களை வதைத்து, தேவர்களின் சிறையை மீட்டு அண்டர் பதியில் குடியேறச் செய்தார். அதனால் அவன் தேவசேனாதிபதி. கீதையில் ஸ்ரீ கிருஷ்ணனும், .. சேனானீம் அஹம் ஸ்கந்தக .. ... என கூறப்படும் ஒப்பற்ற மஹா வீரன் முருகப் பெருமான். புவியும் பரவும் ... விண்ணவர்கள் யுத்தம் வந்தால்தான் முருகனை அழைப்பார்கள். ஆனால் மண்ணவர்களோ எப்பொழுதும் முருகனை துதிப்பவர்கள் என்று கூறி, மண்ணவர்களுக்கு ஒரு ஏற்றம் தருகிறார் அருணை முனிவர். எண்குண பஞ்சரனே ... பஞ்சரம் என்றால் கூடு. உடல் என்றும் பொருள்படும். எட்டு குணங்களுக்கும் இருப்பிடமானவன் முருகன். பரிமேலழகரின் உரையின்படி அவை,
1. தன் வயத்தனாதல்
2. தூய உடம்பினனாதல்
3. இயற்கை உணர்வினனாதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களில் நின்று நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவில்லாத ஆற்றல் உடைமை
8. வரம்பில் இன்பம் உடைமை
இறைவனுடைய தன்மை எல்லாம் அறிந்து, முற்றறிவு உடையவனாயும், எங்கும் நிறைந்தவனாயும், என்றும் அழியாதவனாயும், சர்வ வல்லமை, ஆற்றல் உடையவனாயும், பாசத்தால் கட்டுப்படாதவனாயும், பரம கருணா மூர்த்தியாயும், முடிவில்லாத இன்பம் உடையவனாயும், மனம் வாக்குகளுக்கு எட்டாதவனாயும் இருப்பதுதான் அவன் தன்மை. மானிடர்களுக்கு சொல்வது போல இந்த குணங்களை உடையவன் இறைவன் எனக் கூறுவது தவறு. குணம் ... குணி என்ற முறை இங்கு கிடையாது. இறைவன் இந்த எட்டு குணங்களுக்கும் இருப்பிடமானவன். கந்தர் அநுபூதியின் பயன் 'நெஞ்சக் கன கல்லையும் உருக்குதல்' என காப்புச் செய்யுளில் கூறினார். இப்போது நெஞ்சை உருக்குவதற்கு ஒரு வழி சொல்லித் தருகிறார். முருகனுடைய திரு நாமாக்களை சொல்லிச் சொல்லி உருகவேண்டும் என்கிறார். உள்ளத்தில் முருகனுடைய திரு நாம உட்பொருளை உன்னி உன்னி, அந்த நாமாக்களை வாயால் கூறும்போது, நம் உள்ளம் உருகும். முருகன், குமரன், குகன்' என்ற மூன்று நாமங்களின் தத்துவத்தை அறியவேண்டும். அநேக நாமாக்கள் இருக்க இந்த மூன்று நாமாக்களை மட்டும் கூறுவதற்கு என்ன காரணம்? .. முருகன் .. முருகு என்றால் அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்கிற நான்கு பொருட்கள் உண்டு. இத்தன்மைகளை உடையவன் முருகன். குன்றாத அழகு, என்றும் மாறாத இளமை, வாடாத மணம், இவற்றோடு தெய்வீகத் தன்மையை உடையவன் முருகன். மற்ற மதத்தினர் தத்தம் கடவுளுக்கு கூறும் இயல்புகள் அனைத்தையும் முருகன் என்கிற ஒரே சொல்லில் அடக்கிய பெருமை தமிழ் மொழிக்கே உண்டு. இத்தனித் தமிழ்ச் சொல்லை நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில், .. பண்டைத் தண்மணம் கமழ தெய்வத்து இள நலம் காட்டி .. ... என்பதில் முருகு என்கிற சொல்லின் நால்வகைப் பொருளையும் அடக்கி கூறியிருப்பது ஆச்சரியமானது. அவர் இக்கோலத்தை முருகனுடைய பழைய கோலம் என்கிறார். பஞ்சாட்சரம், ஷடாட்சரம்போல முருகா என்கிற சொல் ஒரு மந்தராட்சரமாக கருதப்படுகிறது. முருகன் என்கிற சொல்லில் பிரணவத்தில் அடங்கிய 'அ, உ, ம' என்கிற மூன்று அட்சரங்கள் உள்ளதை உணரலாம். மேலும் தமிழ் மொழியில் உள்ள மெல்லினம், இடையினம், வல்லினம் உள்ள எழுத்துக்களே 'முருகு' ஆகிறது. மெல்லினம் முதலிலிலும் வல்லினம் கடைசியில் வருவதும் ஆச்சரியமே. கந்தர் அலங்காரத்தில், .. மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் .. ... என்கிறார் அருணகிரியார். முருகா எனும் நாமத்தை பன்மையில் கூறி இருப்பதை உணர வேண்டும்.
.. அ .. கார ரூபனான இறைவனும்
.. உ .. கார ரூபியான இறைவியும்
.. ம .. கார ரூபமாக குறிக்கப்படும் ஆன்மாவும்
முருகன்' என்கிற நாமாவில் அடங்கியுள்ளதால்தான் நாமாக்கள் என பன்மையில் கூறி இருப்பதை உணரலாம். .. குமரன் .. 1. 'கு' என்றால் அல்பம் (Negligible). குச்சிதங்களாகிய காம, குரோத, லோப, மோக, மத மாச்சரிய முதலிய அமங்கல வாசனைகளின் வடிவமான அசுரர்களைக் கொன்றவன் குமாரன். இச் சொல் குறுகி குமரன் ஆகிறது. ஆறுமுகப் பெருமானை தியானம் செய்தால் நம்மிடம் இருக்கும் இந்த ஆன்மீக விரோதிகளான குச்சிதங்கள் ஒழியும். கச்சித் திருப்புகழில் (பாடல் 315), 'கறை இலங்கும்' .. அற்பப் புத்தியை விட்டு ... ... என்பதைக் கவனிக்கவும். 2. 'கு' என்றால் அசுத்தம். மாரன் என்றால் அழிப்பவன். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அழிப்பவன். இந்த மூன்று மலங்களின் மறு உருவங்களே சூரன், தாரகன், கிரவுஞ்சம். இவைகளை அழித்ததன் மூலம் அனாதி காலமாக ஆன்மாவைப் பற்றி இருக்கும் மும்மலங்களையும் அழிப்பவன் குமரன் என்பது கண்கூடு. 3. வடமொழி நிகண்டுகளின்படி .. கெள ... பிரிவ்யம், மாம் ... மோட்ச லட்பீம், ராதி ... கதாதி இதி குமாரஹ. ... அதாவது, இவ்வுலகத்திலேயே ஜீவன் முக்தி நிலையைக் கொடுத்து அருள்பவன் குமாரன் என்பதே இதன் பொருள். .. குகன் .. சாந்தோகி உபநிசத்தில் கூறப்படுவதாவது, இந்த உடலுக்கு பிரம்மபுரம் என்ற பெயர் உண்டு. அதில் தாமரை மொட்டு மாதிரி, கட்டை விரல் அளவில் ஒரு ஸ்தானம் இருக்கிறது. அதில் பிரம்மம், அதாவது பரம் பொருள் விளங்குகிறது. தைத்திரிய உபநிசத்தில்,
சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம யோவேத நிஹிதம் குகாயாம் பரமே யோமன் சோ அஸ்னுதே சர்வான் காமான் சஹ ...
அதாவது, இருதய குகையாகிய பரகாசத்தில் (மயிலாடும் சுத்த வெளியில்), சச்சிதானந்த பிரம்ம சொரூபியான குகனை எவன் அறிகிறானோ அவன் சர்வ அபீஷ்டங்களையும் அடைகிறான் என்பதே. ஸ்காந்தத்தில் சிவபெருமானே முருகனுடைய தத்துவத்தை தேவிக்கு விளக்குகிறார்.
ஏ தேவியே, வேதார்த்தங்களில் இருதயத்திலுள்ள தகராகாசமானது குகை எனக் கூறப்படுகிறது. சகலவித பிராணிகளின் இருதய கமலங்களில் இருக்கும் பக்திக் குகையில் வசிப்பவன் ஆகையால் உன் குமாரன் குகன் எனப்படுகிறான்.
அருணகிரியரும், 'புகரப் புங்க' எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழில் (பாடல் 81), தகரத் தந்தச் சிகரத் தொன்றித் தடநற் கஞ்சத் துறைவோனே ... எனக் கூறுகிறார். முருகன் என்று சொல்லும் போது அவனுடைய தெய்வீகக் கோலம் நமது மனதில் பதிந்து, நம்மை அவனிடம் ஈர்த்து விடும். அடுத்தபடியாக அவனால் நமக்கு நலன்கள் ஏற்படவேண்டும். பிறவிக்குக் காரணமான ஆசைகள் அகன்றாலே பேரின்பம் கிட்டும். ஆசையே பிறப்பிற்கு காரணம். அந்த ஆசைகளுக்கு அதிபதி காமன். மாரனாகிய மன்மதனை வென்றவன் முருகன். குமாரா என்று உள்ளம் உருகக் கூறி, மன்மத ஜெயம் செய்யவேண்டும். இந்த நிலையில் ஆத்மக் குகையில் வீற்றிருக்கும் குகன் நமது உணர்ச்சிகளுடன் ஒன்றாய்க் கலந்து, பேரின்ப வாழ்வு நல்குவான். இவ்வாறு முருகன் என மொழிந்து, குமரன் என்று உருகி, குகன் என்று உணரும் நிலையை நமக்குக் கொடுக்க வல்லவன் அந்த ஆறுமுகக்கடவுள். ... உருகும் செயல் ... நெஞ்சம் கசிந்து உள்ளம் உருகுதல் என்பது சாமான்யப் பொருள். இனி சிறப்புப் பொருளை பார்ப்போம். மாணிக்க வாசகர் திருவெம்பாவையில்,
.. மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதி வாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்மறந்து போதார் அமலியின் மேல் நின்றும் புரண்டிங்கன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் .. ... என்கிறார்.
இறைவன்பால் கொண்ட அன்பின் முதிர்ச்சியின் அறிகுறி அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலே தன் வயம் இழந்து, தற்போதம் கேட்டு மூர்ச்சிக்கும் நிலையை அடைதல்வேண்டும். இந்நிலையை, .. தீவிர தர சத்தினி பாதம் .. ... என்று சித்தானந்த சாதனை கூறும். அப்பர் பெருமான் வாக்கு,
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவகூடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்து அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே ...
திருவாரூர் திருத்தாண்டகம். இதே நிலையை அருணகிரியார் கந்தர் அந்தாதியில் குறிப்பிடும்போது, .. செ புங்கவ சங்கர பாலக தெய்வ வாவி அம்பு செ புங்கவ சங்கு அரி மருகா என சின்னம் முன்னே செப்பு உங்கு அவசம் பெறுவார் ... என கூறுகிறார். ... அருள்வாய் ... இச் சொல்லுக்கு விஷேசமான பொருள் காணலாம். இதுவரை ஆன்மா பக்குவம் அடையும்பொருட்டு மும்மலத்திற்கு துணையாய் இருந்து செயல்பட்டு திருவான சக்தியே மலபரிபாகம் ஏற்பட்டபின் அருட் சக்தியாக மாறி, சக்தி + நிபாதம் + பதியச் செய்வாய். அருணகிரியார், அருட்சக்தியானது தன்னிடம் சக்திநிபாதமாய் திகழ வேண்டும் என்றும், அவ்வாறு பதிவதாலேயே விஷயங்களில் விரக்தி ஏற்பட்டு இறைவனிடம் தனது ஆன்மா விரவவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார். இந்நிலை இவருக்கு கிடைத்தது. அதனை, பத்தியால்' எனத் தொடங்கும் இரத்தினகிரித் திருப்புகழில்,
வித்தகா ஞானசத் திநிபாதா வெற்றிவே லாயுதப் பெருமாளே ... என்கிறார். (திருப்புகழ் - பாடல் 567). இதே கருத்தை 'செவிக்கு ...' என்கிற 26வது கந்தர் அந்தாதியில்,
.. உற்றன, கட்செவிக்குன்ற, வாரண வள்ளி பொற்றாள் .. ... என்று தேவிமார்களின் சக்தி நிபாதம் தமக்கு கிடைத்ததைக் கூறுகிறார்.