ஒரு பெண் தன் வீட்டின் பூஜை அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாலோ, அதே அளவிற்கான முக்கியத்துவத்தை சமையலறைக்கும் கொடுக்க வேண்டும். அந்தப் பெண்ணின் கையில் தான், குடும்பத்தின் ஆரோக்கியமே அடங்கியுள்ளது என்று சொன்னால் அது பொய்யாகாது. தன்னுடைய குடும்பத்தின் ஆரோக்கியம், தன் கையில் உள்ளது என்பதை நினைவில் கொண்டு தன்னுடைய சமையலறையை தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
தன் குடும்பத்தின் ஆரோக்கியம் குறைந்து விடக்கூடாது, என்பதாலேயே சமையலறை கட்டுப்பாட்டை அடுத்தவரிடம் சில பெண்கள் கொடுக்க விரும்ப மாட்டார்கள். ‘என் சமையலறையை பயன்படுத்தும் உரிமை எனக்கு மட்டும்தான் உள்ளது’. என்று பிடிவாதமாக சொல்லும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! இப்படிப்பட்ட இந்த சமையலறையில் உப்பை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குடும்பத் தலைவியின் ஒரு கடமை. உப்புடன் சேர்த்து இன்னும் சில விஷயங்களையும் கவனித்துக் கொண்டால் வீட்டில் ஐஸ்வர்யம் குறையாமல் இருக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். அது என்னென்ன பொருட்கள் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சமையலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், மஞ்சள் தூள் வீட்டு சமையலறையில் என்றும் குறையாமல் இருக்க வேண்டும். சுத்தமாக தீருவதற்கு முன்பாகவே மஞ்சள் தூளையும் வாங்கி வைத்துக் கொள்வது மிக மிக அவசியம். இதேபோன்று அந்த காலங்களில் எல்லாம் மண் பானைகள், பித்தளை அண்டா, செம்பு தவலை, இவற்றிலெல்லாம் தண்ணீரை குறையாமல் வைத்து இருப்பார்கள். இந்த காலம் நவீன காலமானதால், RO வாட்டர் டேங்கிலிருந்து தண்ணீரை குழாய் மூலம் பிடித்து குடிக்கின்றோம். இருந்தாலும் ஒரு சிறிய குடத்திலோ அல்லது ஒரு சிறிய சொம்பிலாவது தண்ணீர் நிரம்பி இருக்கும் படி, சமையல் அறையில் வைக்க வேண்டியது அவசியம்.
அடுத்ததாக மிக மிக முக்கியமாக சமையல் அறையில் இருக்க வேண்டிய ஒரு படம் அன்னபூரணியின் திருவுருவப்படம். சமையலறையில் உப்பை குறையாமல் பார்த்துக் கொள்வது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு இந்த அன்னபூரணியின் படம் சமையல் அறையில் இருக்க வேண்டியதும் மிகவும் முக்கியமான ஒன்று.
அசைவம் சமைக்கும் சமயத்தில் தெய்வத்தின் திருவுருவப்படம் அந்த அறையில் இருப்பதை விரும்பாதவர்கள், அன்று மட்டும் எடுத்து பூஜை அறையில் வைத்து கொள்ளலாம். தினம்தோறும் சமையலை தொடங்குவதற்கு முன்பு பெண்கள், இந்த அன்னபூரணியை வணங்கிவிட்டு சமையல் செய்யத் தொடங்கினால், அவளுடைய பரம்பரைக்கே சாப்பாட்டிற்கு பஞ்சம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.